search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிவாரண உதவி"

    புதுக்கோட்டை மாவட்டத்தில் நிவாரண உதவிகள் வழங்க கோரி 10 இடங்களில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். #GajaCyclone
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. இதனால் கந்தர்வக்கோட்டை அருகே வேம்பன்பட்டி கிராமம் பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில் நிவாரண பொருட்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கேட்டு வேம்பன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பொதுமக்கள் கந்தர்வக்கோட்டை-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த கந்தர்வக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரண பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதேபோல் கந்தர்வக்கோட்டை பஸ் நிலையம் அருகே உடையார்தெரு, பெரிய கடைவீதி, சின்ன அரிசிக்கார தெரு மற்றும் குமரன் காலனி, இந்திரா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கந்தர்வக் கோட்டை நகரத்திற்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கந்தர்வக்கோட்டை தாசில்தார் நேரில் வந்து நிவாரண பொருட்கள் வழங்க உறுதியளிக்க வேண்டும் என்று கோ‌ஷமிட்டனர். ஆனால் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

    அப்போது அந்த வழியாக வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், ஆறுமுகம் எம்.எல்.ஏ. ஆகிய இருவரையும் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை முறையாக அனைத்து பகுதி பொதுமக்களுக்கும் பிரித்து வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.

    அப்போது அமைச்சர் அனைவருக்கும் நிவாரண பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

    ஆலங்குடி அருகே உள்ள கரும்பிரான்கோட்டை கிராமத்தில் புயலால் குடிநீர், மின்சாரம் வழங்ககோரி ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஆலங்குடி-அறந்தாங்கி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் வடவாளம் காலனி பொதுமக்கள் குடிநீர் கேட்டு புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி சுற்று வட்டார கிராம பகுதியில் கஜா புயல் காற்றில் அதிக அளவில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மரங்களும் சேதம் அடைந்துள்ளன. சீரமைக்கும் பணியில் மின்சாரத்துறை பணியாளர்கள் ஈடுபட்டனர் வருகின்றனர். இந்நிலையில் கஜா புயல் காற்று வலுவிழந்து 13 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என கோரியும், எங்கள் கிராமத்தில் இருந்து அடுத்த கிராமத்திற்கு செல்லும் பகுதியில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

    உடனே எங்கள் கிராமத்திற்க்கு மின் இணைப்பு கொடுக்க வேண்டும் என கோரி அறந்தாங்கி அடுத்துள்ள கூத்தங்குடி பகுதி பொதுமக்கள் கட்டுமாவடி சாலையில் மறியல் ஈடுபட்டனர். இதேபோல் அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    அரிமளம் ஒன்றியம் செங்கீரையில் மின்வினியோகம் செய்யபடாததை கண்டித்து பொதுமக்கள் செங்கீரையில் மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அரிமளம் பேரூராட்சிக்கு உட்பட்ட காசில் பழனி தெருவில் மின்சாரம் வழங்கக்கோரி பொதுமக்கள் அரிமளம் சிவன்கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

    கறம்பக்குடி அருகே குரும்பிவயல் கிராமத்தில், ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் அனைவரும் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களாகவே உள்ளனர். கஜாபுயலின் தாக்குதலால் அந்த கிராமத்தில் இருந்த அனைத்து குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

    இதனால் குடிநீர், மின்சாரம் இன்றி பல நாட்களாக அப்பகுதி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். ஜெனரேட்டர் மூலமும் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. தனி தீவாக உள்ள இந்த கிராமத்திற்கு எந்த அதிகாரிகளும் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த குரும்பிவயல் பொதுமக்கள் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் அண்டக்குளம் அடுத்துள்ள கொப்பம்பட்டியில் கஜா புயலால் மரங்கள், மின் மாற்றிகள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை விழுந்துள்ளன. இதனால் அப்பகுதியில் குடிநீர், மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தற்போது அப்பகுதி மக்களுக்கு ஜெனரேட்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

    கடந்த 2 நாட்களாக அந்த தண்ணீரையும் நிறுத்தி விட்டனர். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளை அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் குடிநீர், மின்சாரம் கேட்டு கொப்பம்பட்டி-செங்கிபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். #GajaCyclone
    நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகை:

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

    இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.



    பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசிய பினராயி விஜயன் வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #KeralaCM #PinarayiVijayan #PMModi
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக அந்த மாநிலமே கடும் பாதிப்பை சந்தித்தது.

    பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மத்திய அரசு சார்பில் ரூ.600 கோடி நிதி உதவியையும் அவர் கேரளாவுக்கு வழங்கினார். அதே சமயம் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இந்த நிதி உதவி போதாது என்றும் கூடுதல் நிதிஉதவி அளிக்க வேண்டும் என்றும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மத்திய அரசை கேட்டுக்கொண்டார்.

    கேரள வெள்ள பாதிப்புகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் உதவிகள் குவிந்தன. இதைதொடர்ந்து அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக பினராயி விஜயன் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார். சுமார் 20 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் கேரளா திரும்பினார். இதைதொடர்ந்து அவர் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

    கோப்புப்படம்

    அப்போது கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு ரூ.4 ஆயிரத்து 796 கோடி நிதி உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் ரூ.16 ஆயிரம் கோடி கடனாக கேரள அரசுக்கு வழங்கும்படியும் அவர் கோரிக்கை விடுத்தார்.

    கேரளாவில் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள சுற்றுலா தலங்கள் மேம்பாடு பணி, புதிதாக சாலை அமைப்பு, மின்வசதி போன்ற பணிகளை செய்யவும், புதிதாக தொழில் தொடங்க வியாபாரிகளுக்கு உதவி செய்யவும் இந்த நிதி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார். விவசாயிகள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவும், இடிந்த வீடுகளை பொதுமக்களுக்கு கட்டி கொடுக்கவும் நிதி தேவையாக உள்ளதாகவும் அவர் கேட்டுக்கொண்டார். பினராயி விஜயனின் கோரிக்கையை கேட்ட பிரதமர் அதுபற்றி ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். #KeralaCM #PinarayiVijayan #PMModi

    நீரில் மூழ்கி பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டம், கொண்டையாம்பாளையம் கிராமம், கள்ளிப்பட்டி புதுப்பாலம் அருகே 15.9.2018 அன்று தண்டபாணி என்பவரின் மகன் சௌந்தர்ராஜன் மற்றும் அய்யாசாமி என்பவரின் மகன் தமிழரசன் ஆகிய இருவரும் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம், கல்குளம் மதுரா சூரிய பிள்ளையார் குப்பம் கிராமத்தில் 17.9.2018 அன்று கிணற்றின் மீது ஏறி குடிநீர் எடுக்கும் போது, கிணற்றின் மீது போடப்பட்டிருந்த சிமெண்ட் சிலாப் உடைந்ததில், சங்கர் என்பவரின் மனைவி சசி, செல்லமுத்து என்பவரின் மனைவி மங்கை மற்றும் ஏழுமலை என்பவரின் மனைவி கமலா ஆகிய மூன்று நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

    நீரில் மூழ்கி உயிரிழந்த சௌந்தர்ராஜன், தமிழரசன், சசி, மங்கை மற்றும் கமலா ஆகிய ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்பதில் தவறு இல்லை என்று வைகோ தெரிவித்துள்ளார். #KeralaFloodRelief
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ராதாபுரத்தில் ம.தி.மு.க. சார்பில் தொண்டரணி பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமை கட்சியின் பொது செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந் தேதி ம.தி.மு.க. சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக விழுப்புரம் மாவட்டத்தில் 100 தொண்டர்கள் பயிற்சி பெற்றுள்ளனர்.

    இம்மாநாடு ம.தி.மு.க.வின் வெள்ளிவிழா மாநாடாகவும், தந்தை பெரியார், அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடாகவும் நடக்கிறது. இதில் அனைத்து தோழமை கட்சி நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.

    வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதில்லை என்ற நிலைப்பாடு எடுத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்வதில் தவறில்லை. அதே நேரத்தில் மனிதாபிமானத்தோடு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் எந்த மாநிலமாக இருக்கட்டும், பெரும் பேரிடர்களில் சிக்கி பரிதவிக்கும் நேரத்தில் மனித நேயத்தோடு செய்யும் உதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    இதன் மூலம் மனிதாபிமானத்திற்கும், நாடுகளிடையே நட்புறவு மலர்வதற்கும் சரியானதாக இருக்கும். எனவே மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    தி.மு.க. தலைவராக ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்கிறார். அவருக்கு ம.தி.மு.க. சார்பில் மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தி.மு.க.வை வெற்றிப் பாதையில் முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்.

    தமிழக அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி வருவதால் முடங்கி கிடக்கிறது. மணல் கொள்ளையை தடுக்காததாலும், தடுப்பணைகளை முறையாக கட்டாததாலும், முக்கொம்பு, மேலணை போன்ற அணைகளை பராமரிக்காததாலும் தமிழகத்திற்கு பெரும் துயரமும், துன்பமும்தான் ஏற்பட்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மணி, மாநில அரசியல் ஆய்வுக்குழு உறுப்பினர் செந்தில் அதிபன், மாவட்ட செயலாளர் பாபுகோவிந்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர். #MDMK #Vaiko #KeralaFloodRelief
    கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் டெல்டா கிராமங்களில் வெள்ளம் பாதித்த மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.
    கடலூர்:

    கொள்ளிடம் வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் வள்ளம் படுகை, பழநெல்லூர், வெங்காயமேடு, அகரநல்லூர், நடுத்திட்டு, பைபூர் ஆகிய பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் இது குறித்து அறிந்து டெல்டா மாவட்டங்களை சேர்ந்த பொறுப்பாளர்களை வெள்ள பாதிப்பு பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    மக்கள் தங்குவதற்கான முகாம்கள் அமைத்தல், உணவுப்பொருட்கள், போர்வை முதலிய அத்தியாவசிய பொருட்களை வழங்குதல் போன்ற வேலைகள் நடைபெற்று வருகின்றன. அணைக்கரை பகுதியில் கொள்ளிடக்கரை ஓரத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கரையோரப்பகுதி மக்கள் அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    மக்கள் நீதி மய்ய பொறுப்பாளர்கள் அவர்களுக்கு உணவு, பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில அரசு இன்று 10 கோடி ரூபாய் வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது. #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    சண்டிகர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

    இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்படட் வெள்ளத்தில் சிக்கி 164 பேர் பலியாகி உள்ளதாக கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக பஞ்சாப் மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் 10 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், முதல் கட்டமாக, கேரள முதல் மந்திரி நிவாரண நிதிக்கு 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உணவு பொருள்கள் உள்ளிட்ட பிற பொருள்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் உதவியுடன் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்தனர். #KeralalRain #Keralafloods #AmarinderSingh
    கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில அரசு இன்று 5 கோடி ரூபாயை இன்று வழங்கியுள்ளது. #KeralalRain #Keralafloods #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    கேரளா மாநிலத்தில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகளும், ஏரிகளும் நிரம்பி வழிகின்றன.

    மொத்தம் உள்ள 39 அணைகளில் 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளது. அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், தொடர் மழையால் கேரளாவின் அனைத்து மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 72 பேர் பலியாகியுள்ளனர்.

    வெள்ளம் பாதிப்பு அடைந்த கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளது. மேலும், பல்வேறு மாநிலங்கள் நிவாரண தொகை அளித்து வருகின்றன.

    இந்நிலையில், கேரளா மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண உதவியாக ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் 5 கோடி ரூபாய் அளித்து உத்தரவிட்டுள்ளார். 

    இது தொடர்பாக, நவீன் பட்நாயக் கேரளா முதல் மந்திரி பினராயி விஜயனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிவாரண நிதி அளிப்பது குறித்து பேசினார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கவும் தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார். #KeralalRain #Keralafloods ##NaveenPatnaik
    திருச்சிற்றம்பலம் அருகே நேற்று மதியம் தீ விபத்தில் 2 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்-கலெக்டர் நிவாரணத் தொகை வழங்கினார்.
    திருச்சிற்றம்பலம்:

    தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி வடக்கு ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 50). கூலித்தொழிலாளி. நேற்று மதியம் இவரது கூரை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு வீடு முழுவதும் எரிந்து நாசமானது. இதில் அனைத்து ஆவணங்களும் பிற பொருட்களும் எரிந்து சாம்பலானது.     

    இதே தெருவைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன், (46)  கூலித்தொழிலாளி ராமநாதபுரத்தில் செங்கல் சூளையில் வேலைபார்த்து வருகிறார். வீட்டில் உள்ள மற்றவர்கள் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று விட்டனர். அப்போது நீ இவரது கூரை வீட்டிற்கும் பரவியதால், முழுவதும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த ஆவணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், துணிமணிகள் அனைத்தும் எரிந்து சாம்பலானது. 

    தகவலறிந்து வந்த பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்து நடந்த இடம் அருகாமையில் செருவா விடுதி அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் மாணவர்கள் அனைவரும் அவரசம் அவசரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த  தீ விபத்து குறித்து திருச்சிற்றம்பலம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். 

    தகவல் அறிந்த திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் பார்த்தசாரதி, மேற்கு கிராம நிர்வாக அலுவலர் ராஜமாணிக்கம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் மகாலட்சுமி, தாசில்தார் சாந்தகுமார் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் நிவாரணப் பொருட்கள் மற்றும் உதவித்தொகை ஆகியவற்றையும் வழங்கினர்.
    ×